இருளில் பாம்பன் பாலம்: விபத்து ஏற்படும் அபாயம்
ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் மின் விளக்குகள் எரியாமல் இருளில் மூழ்கியிருப்பதால் சுற்றுலாப்பயணிகளுக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.பாம்பன் கடலில் 1988ல் அமைக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலை பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. இது ராமேஸ்வரம் தீவை இணைக்கும் கேந்திரமாக உள்ளதால் தினமும் ஏராளமான வாகனங்களில் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்து செல்கின்றனர். இப்பாலத்தில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை பராமரிப்பு பணி செய்கின்றனர்.கடைசியாக 2022ல் பாலத்தில் சேதமடைந்த துாண்கள், தடுப்புச் சுவர்கள், மின்கம்பங்களை புதுப்பித்து இருபுறமும் 428 மின் விளக்குகள் பொருத்தினர். இதன் பின் பாலம் இரவில் மின்னொளியில் ஜொலித்தது. காலப்போக்கில் பராமரிப்பின்றி 20 விளக்குகள் தவிர அனைத்தும் எரியாமல் போனது.இதனை சரி செய்ய தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் முன்வராததால் பாலம் இருளில் மூழ்கியுள்ளது. இதனால் பாலத்தை கடந்து செல்லும் சுற்றுலா வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்தில் உள்ளனர். இதில் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.