உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமநாதபுரம் கிராமங்களில் பனங்கிழக்கு விளைச்சல் அதிகரிப்பு!.... மதிப்பு கூட்டப்பட்டு வெளி மாவட்டங்கள் செல்கிறது

ராமநாதபுரம் கிராமங்களில் பனங்கிழக்கு விளைச்சல் அதிகரிப்பு!.... மதிப்பு கூட்டப்பட்டு வெளி மாவட்டங்கள் செல்கிறது

மாவட்டத்தில் மன்னார் வளைகுடா கடலோரப் பகுதியை ஒட்டி உள்ள கிராமங்களில் இயற்கையாக வளர்ந்துள்ள பனை மரங்கள் பல்வேறு பலன்களை தருகின்றன. ரெகுநாதபுரம், காரான், கும்பரம், வாலாந்தரவை, பத்தராதிரவை, நைனாமரைக்கான், பெரியபட்டினம், முத்துப்பேட்டை, வண்ணாங்குண்டு, தினைக்குளம், சேதுக்கரை, காஞ்சிரங்குடி, திருப்புல்லாணி, சாயல்குடி, சிக்கல், கன்னிராஜபுரம், நரிப்பையூர் உள்ளிட்ட இடங்களில் அதிகளவில் பனை மரங்கள் உள்ளன. பனை தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் பனங்கொட்டைகளை உரிய காலத்தில் சேகரித்து அவற்றை மண்ணில் புதைத்து வைத்து மூன்று மாதங்கள் இடைவெளியில் கிழங்காக விளைவிக்கின்றனர். கார்த்திகை முதல் வாரத்திலேயே விற்பனைக்கு வரக்கூடிய பனங்கிழங்குகள் மார்கழி, தை, மாசி உள்ளிட்ட மாதங்களில் அதிகளவில் கிடைக்கின்றன. பனை மரத்தின் அனைத்து பொருள்களும் பலன் தரும் நிலையில் குறிப்பாக பனங்கிழங்குகள் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. மற்ற ஊரைக் காட்டிலும் ராமநாதபுரம் மாவட்ட பகுதியில் விளையக்கூடிய பனங்கிழங்குகளுக்கு அதிக மவுசு நிலவுவதால் கோவை, திருச்சி, சென்னை, மதுரை உள்ளிட்ட நகரங்களுக்கு வியாபாரிகள் மொத்தமாக சரக்கு வாகனங்களில் வாங்கிச் செல்கின்றனர். ரெகுநாதபுரம் பனங்கிழங்கு வியாபாரி தர்மராஜ் கூறியதாவது: விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் தங்களது தோட்டங்கள், நிலப் பகுதிகளில் பனங்கிழங்கு சாகுபடி செய்வதில் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். இப்பகுதியில் விளையக்கூடிய பனங் கிழங்கு நல்ல பருமனாகவும் திரட்சியாகவும் அதிக சுவை உள்ளதாகவும் உள்ளதால் இதன் மகத்துவம் அறிந்து வெளி மாவட்டங்களில் இங்குள்ள பனங்கிழங்கிற்கு கிராக்கி உள்ளது. பனங்கிழங்கில் இருந்து பனங்கிழங்கு மாவு தயாரிக்கப்பட்டு இந்த மாவில் களி, அடை சத்துமாவு, இடியாப்ப மாவு போன்ற தின்பண்டங்கள் தயாரிக்கப்படுகின்றன. பனங்கிழங்கு சிப்ஸ், வத்தல் கூட செய்யப்படுகிறது. நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் செரிமானத்திற்கு மிகவும் சிறந்தது. கால்சியம், இரும்புச்சத்து போன்ற முக்கியமான சத்துக்களும் இருப்பதால் பலர் விரும்பி வாங்கி சாப்பிடுகின்றனர். 1000 கிழங்குகள் ரூ.2500 முதல் 3000 வரை விற்கிறது. சில்லரை விற்பனையில் கிழங்கு ரூ.5 வீதம் அவித்தும், சுட்டும் விற்கப்படுகிறது. இதன் சீசன் தற்போது துவங்கியுள்ளதால் ஏராளமானோருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் பனங்கிழக்கு வேலை வாய்ப்பை உருவாக்குகிறது என்றார். கடற்கரையோர பகுதிகளில் பனங்கிழங்கு உற்பத்தி தற்போது பெய்த மழையின் காரணமாக நன்கு விளைச்சலுக்கு வந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ