கன்னிராஜபுரத்தில் வீணாகும் குடிநீர் கண்டுகொள்ளாத ஊராட்சி நிர்வாகம்
சாயல்குடி : சாயல்குடி அருகே கன்னிராஜபுரத்தில் இருந்து சுற்றுவட்டார கிராமங்களுக்கு கிணறுகள் மூலமாக தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கும் மேலாக கன்னிராஜபுரம் தெருக்களில் குடிநீர் குழாய் செல்லும் பைப் லைனில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் தண்ணீர் பெருக்கெடுத்து குளம் போல் தேங்கி வருகிறது. பொதுமக்கள் கூறியதாவது: கன்னிராஜபுரம் ஊராட்சியில் உள்ள கிணற்றில் இருந்து கடலாடி, சாயல்குடி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களுக்கு கிணறுகள் மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு லாரிகள் மற்றும் டிராக்டர்களில் குடிநீர் விற்பனை செய்யப்படுகிறது இந்நிலையில் ஊராட்சிக்கு சொந்தமான ஆழ்துளை கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து அவற்றை முறையாக தெரு பைப்புகளுக்கு வழங்காத நிலை தொடர்கிறது. இதனால் ஒரு குடம் தண்ணீரை ரூ.4க்கு சொந்த ஊராட்சிலேயே விலைக்கு வாங்கி பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. தெருக்களில் உள்ள குழாய்களில் முறையாக தண்ணீர் வருவதில்லை. டேங்கர் மூலமாக ஊராட்சியில் மக்கள் விலைக்கு வாங்கி வருகின்றனர். எனவே கன்னிராஜபுரத்தில் தனி அலுவலர் உரிய முறையில் ஆய்வு செய்து குழாய்களில் முறையாக தண்ணீர் விடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.