பரமக்குடியில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதில் குழப்பிய மாவட்ட நிர்வாகம் பெற்றோர், மாணவர்கள் அவதி
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டத்தில் 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்ட நிலையில் பரமக்குடியில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதில் மாவட்ட நிர்வாகம் முடிவு எடுக்காத நிலையில் பெற்றோர், மாணவர்கள் அவதிப்பட்டனர்.ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்தது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை இருக்கும் என பெற்றோர், மாணவர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் விடுமுறை குறித்து அந்தந்தப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் முடிவு எடுத்துக் கொள்ளலாம் என்றனர். நேற்று காலை பரமக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் லேசான மழை துாறியது.இதனால் அனைத்து பள்ளி மாணவர்களும், பெற்றோரும் விடுமுறை அறிவிப்பு வருமா என்று ஒவ்வொரு பள்ளியிலும் கேட்டறிந்தனர். ஆனால் ஒரு சில பள்ளிகள் தவிர அனைத்து பள்ளிகளும் இயங்கியது. இதனால் மாணவர்கள் மழையில் நனைந்தபடி செல்லும் நிலை ஏற்பட்டது.கிராமங்களில் இருந்து வரும் மாணவர்கள் அவதி அடைந்தனர். இதேபோல் பள்ளி விடும் நேரத்திலும் மாற்றம் ஏற்பட்டது. தொடர்ந்து மதியம் 12:30 மணி முதல் ஒவ்வொரு பள்ளியாக விடுமுறை அளிக்க துவங்கினர். இதனால் வீடுகளுக்கு செல்லும் மாணவர்கள் பெற்றோர் வருகையை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.மேலும் கிராமங்களுக்கு செல்லும் மாணவர்கள் பஸ் இல்லாமல் பஸ் ஸ்டாண்டில் காத்திருந்து அவதிப்பட்டனர். எனவே வரும் நாட்களில் விடுமுறையை மாவட்ட நிர்வாகமே அறிவித்து பெற்றோர் மற்றும் மாணவர்களின் குழப்பத்தை தவிர்க்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.