ராமநாதபுரத்திலிருந்து போதியளவு பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் தவிப்பு
ராமநாதபுரம்: -ராமநாதபுரத்தில் போதிய அளவு பஸ்கள் இயக்கப்படாததால் பொங்கல் விடுமுறை முடிந்து ஊருக்கு, பணிபுரியும் இடத்திற்கு திரும்ப முயன்ற பயணிகள் பல மணி நேரம் ராமநாதபுரம் பழைய பஸ் ஸ்டாண்டில் காத்திருந்து சிரமப்பட்டனர்.தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு ஜன., 14 முதல் 19 வரை தொடர் விடுமுறை காரணமாக பல்வேறு பகுதிகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு வருகை தந்தனர். விடுமுறை முடிந்து நேற்று மீண்டும் தங்களது பணியிடத்திற்கு திரும்புவதற்காக குடும்பத்துடன் ஏராளமான பயணிகள் ராமநாதபுரம் பழைய பஸ் ஸ்டாண்டில் குவிந்தனர். போதிய அளவு பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து மிகவும் அவதிப்பட்டனர். பஸ்களில் ஏறுவதற்கும், இடம்பிடிக்கவும் போட்டி ஏற்பட்டது. எனவே இனி வரும் காலங்களில் இது போன்ற தொடர் விடுமுறை, பண்டிகை காலங்களில் அதிக பஸ்களை இயக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தினர்.