கீழச்செல்வனுார் பஸ் ஸ்டாப் அருகே கழிவுநீர் தேக்கம் பயணிகள் அவதி
சிக்கல்: சிக்கல் அருகே கீழச்செல்வனுார் பயணியர்நிழற்குடை அருகே பல மாதங்களாக கழிவுநீர் தேங்கி ரோட்டில் பாய்கிறது.கீழச்செல்வனுார் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சாயல்குடி செல்வதற்காக கீழச்செல்வனுார் பயணியர் நிழற்குடை பகுதிக்கு அதிகளவில் வருகின்றனர். இந்த பயணியர் நிழற்குடை அருகே கழிவுநீர் வாறுகாலில் இருந்து கசிந்து தேங்கியுள்ளது.கிழக்கு கடற்கரைச் சாலையின் பிரதான பகுதியான இங்கு கழிவுநீர் தேங்கியுள்ளதால் வாகனங்கள் வேகமாக வரும் போது கழிவு நீர் அங்கு செல்லும் மக்களின் மீது படுகிறது. பொதுமக்கள் கூறியதாவது: கீழச்செல்வனுார் பஸ் ஸ்டாப் அருகே உள்ள பயணிகள் நிழற்குடை பகுதியில் கழிவு நீர் தேங்கியுள்ளது. இதனால் கிழக்கு கடற்கரைச் சாலை சேதமடைந்து வருகிறது. நோய்த் தொற்று ஏற்படுகிறது. அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார கேடாக உள்ளது.எனவே கீழச்செல்வனுார் ஊராட்சி நிர்வாகம் பிரதான சாலையில் கழிவுநீர் தேங்குவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.