அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறை நோயாளிகள் அவதி
கீழக்கரை : கீழக்கரை அரசு தாலுகா மருத்துவமனையில் போதிய டாக்டர்கள் இல்லாததால் நோயாளிகள் நீண்டநேரம் காத்திருந்து சிரமபப்படுகின்றனர்.கீழக்கரை அரசு தாலுகா மருத்துவமனையில் கடந்த பல நாட்களாக ஒரே டாக்டரை வைத்து மருத்துவமனை இயங்கி வருகிறது.கீழக்கரை நகராட்சியில் 60 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் உள்நோயாளிகளாகவும் புற நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.இது குறித்து கீழக்கரையை சேர்ந்த எம்.எஸ்.சகுபர் உசேன் கூறியதாவது: தாலுகா மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறை உள்ளது. ஒரு டாக்டர் மட்டுமே இருக்கிறார். பார்மசியில் வேலை செய்யும் அலுவலர் டாக்டரிடம் கையெழுத்து வாங்கிவிட்டு வாருங்கள் என்று சொல்லி அலைகழிக்கின்றனர். ஒரு டாக்டர் மட்டுமே பணியில் இருப்பதால் நோயாளிகள் அத்தனை பேருக்கும் கையெழுத்து போட்டு கொடுப்பது சிரமமான காரியமாக உள்ளது.இதனால் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து மருந்து மாத்திரைகள் வாங்கும் நிலை உள்ளது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திற்கு புகார் அளித்துள்ளேன், இதுபோன்று தொடர்ந்து நோயாளிகளை அவமதிக்கும் செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். கீழக்கரையின் மக்கள் தொகைக்கு ஏற்ப டாக்டர்கள் நியமித்து குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்றார்.