ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் நோயாளிகள் அவதி: ஆறு லிப்ட்டுகளில் இரண்டு மட்டுமே செயல்படுகிறது
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் லிப்டுகள் சரியாக இயங்காததால் இயக்கப்படும் 2 லிப்ட்டுகளில் நோயாளிகள் தவிக்கின்றனர்.ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் புதிய கட்டடம் ரூ.154.84 கோடியில் 5 தளங்களில் 500 படுக்கைகள் கொண்ட கட்டடம் 2023 ஆக.,ல் பயன்பாட்டிற்கு வந்தது. இந்த கட்டடத்தில் 5 தளங்களுக்கும் டாக்டர்கள், நோயாளிகள், பார்வையாளர்கள் என அனைவரும் சென்று வருவதற்காக கிழக்குப் பகுதியில் 2 லிப்டுகளும், மேற்கு பகுதியில் 2 லிப்டுகளும் டாக்டர்கள் பணியாளர்கள் செல்வதற்காக தனியாக இரு லிப்டுகளும் அமைக்கப்பட்டுள்ளன.கட்டடம் திறக்கப்பட்டதில் இருந்து தினமும் ஆயிரத்திற்கும் அதிகமானோர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர். இந்த ஆறு லிப்டுகளும் முழுமையாக ஒரு நாள் கூட இயக்கப்படவில்லை.தற்போது இரு லிப்டுகள் மட்டுமே செயல்படுகிறது. இதில் நோயாளிகளை ஏற்றிச் செல்வதா, டாக்டர்கள், பணியாளர்களை ஏற்றிச் செல்வதா என குழப்பத்தில் பணியாளர்கள் உள்ளனர். ஆறில் இரண்டு லிப்ட் மட்டுமே செயல்படுவதால் நோயாளிகளை பார்ப்பதற்காக வரும் வயதான பார்வையாளர்கள் மாடிப்படிகளின் வழியே செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு பார்வையாளர்கள் வருவதற்கு அச்சப்படுகின்றனர். லிப்டுகளை இயக்கும்பணியாளர்கள் பார்வையாளர்களை ஏளனமாக பேசுவதும், மாடிப்படிகள் வழியா செல்ல வலியுறுத்தியும் வருகின்றனர். பார்வையாளர்கள் போராடினாலும் நோயாளிகளை கவனித்துக்கொள்ளும் உதவியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அவர்களை கூட லிப்டுகளில் அனுமதிக்க மறுக்கின்றனர்.அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுத்து பார்வையாளர்கள், நோயாளிகள், டாக்டர்களுக்கு தனித்தனி லிப்டுகளை இயக்க வேண்டும். செயல்படாமல் இருக்கும் அனைத்து லிப்டுகளையும் செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.