உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / திருப்புல்லாணி கோயிலில் வழங்கப்படும் பாயாசம்: ராமாயணத்துடன் தொடர்புடையது

திருப்புல்லாணி கோயிலில் வழங்கப்படும் பாயாசம்: ராமாயணத்துடன் தொடர்புடையது

திருப்புல்லாணி: ராமநாதபுரத்தில் இருந்து 9 கி.மீ.,ல் திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இங்கு வழங்கப்படும் பாயாசம் ராமாயண இதிகாசத்துடன் தொடர்புடையது.வைணவ திவ்ய தேசங்கள் 108 ல் 44வதாக திகழ்கிறது திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் சமேத பத்மாஸனி தாயார் கோயில். இங்கு தினந்தோறும் காலை 9:30 முதல் 10:30 மணிக்குள் நித்தியகால பூஜை பிரசாதமாக திருக்கண்ணமுதம் எனப்படும் பாயாசம் வழங்கப்படுகிறது.குழந்தை வரம் வேண்டி வரும் தம்பதிகளுக்கு மூலவர் ஆதி ஜெகநாத பெருமாள், பத்மாஸனி தாயார், தெர்ப்ப சயன ராமர் ஆகியோர் சன்னதியில் சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் சந்தான கோபாலகிருஷ்ணருக்கு குங்குமத்தால் 108 அர்ச்சனை செய்யப்படுகிறது. கோயில் மடப்பள்ளி வளாகத்தில் வரிசையாக கிழக்கு நோக்கி தம்பதிகள் அமர வைக்கப்பட்டு புத்திர பாக்கியத்திற்காக பாயாசம் வழங்கப்படுகிறது.கோயில் பட்டாச்சாரியார்கள் கூறியதாவது: திருக்கண்ணமுதம் எனப்படும் பாயாசம் தயாரிப்பதற்கு தேவையான அளவிற்கு பச்சரிசி, வெல்லம், பால், ஏலக்காய், நெய், முந்திரி பயன்படுத்தப்படுகிறது. பச்சரிசியில் அதிகளவு தண்ணீர் சேர்த்து சாதம் வடிக்க வேண்டும். நன்கு அரிசியை பிசைந்து அதனுடன் வெல்லம் பால் உள்ளிட்டவைகளை சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.இதன் மூலம் ருசி மிகுந்த பாயாசம் கிடைக்கிறது. முன்பு ராமாயண காலத்தில் தசரத மகா சக்கரவர்த்தி குழந்தை வரம் வேண்டி இங்கு உள்ள ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் புத்திர காமேஷ்டி யாகம் செய்தார். அதில் இருந்து வெளிப்பட்ட அக்னி தேவரின் கையில் பாயாசம் இருந்தது. அதன் மூலம் மன்னர் தசரதர் புத்திர பாக்கியம் பெற்றதாக புராணத்தில் கூறப்படுகிறது.நித்தியகால பூஜை திட்டத்தின் மூலம் பாயாசம் தினமும் 20 முதல் 30க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இதன் மூலம் புத்திர பாக்கியம் பெற்றவர்கள் இதன் பயனைச் சொல்லி பெருமாளை வேண்டி செல்கின்றனர் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை