மின் கம்பிகளில் சிக்குவதால் மயில்கள் இறப்பு அதிகரிப்பு
திருவாடானை : திருவாடானை பகுதியில் கண்மாய்கள் வழியாக செல்லும் மின்கம்பிகளில் சிக்கி மயில்கள் இறப்பது அதிகரித்து வருகிறது. திருவாடானை பகுதியில் அஞ்சுகோட்டை, மங்களக்குடி, சிறுகம்பையூர், நீர்க்குன்றம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கண்மாய்களில் மான்கள், மயில்கள் கூட்டமாக வசிக்கின்றன. மயில்கள் இரை தேடி பறக்கும் போது மின்கம்பிகளில் சிக்கி இறந்து விடுகின்றன. இது குறித்து செங்கமடை கிராம மக்கள் கூறியதாவது: திருவாடானை கண்மாயில் மான்கள், மயில்கள் ஏராளமாக வசிக்கின்றன. நேற்று முன்தினம் திருவாடானை கண்மாயில் மாலை 6:00 மணிக்கு ஒரு ஆண் மயில் பறந்து சென்ற போது உயர் அழுத்த மின்கம்பியில் சிக்கி இறந்து விழுந்தது. இதே போல் மயில்கள் இறப்பதும், காயமடைவதும் வழக்கமாக உள்ளது. சில கண்மாய்களில் மரங்கள் வெட்டி அழிக்கப்படுகிறது. இதனால் மயில்கள் வாழ இடமின்றி வேறு இடத்தை நோக்கி செல்கின்றன. எனவே கண்மாய்களில் பல்வேறு வகையான மரங்களை வளர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வனத்துறையினரும் அவ்வப்போது கண்மாய்க்குள் சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபடவேண்டும் என்றனர்.