உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / டூவீலர் சைலன்சர்களை மாற்றி அதிக சத்தம்  எழுப்பும் வாகன ஓட்டிகளால் மக்கள் பாதிப்பு

டூவீலர் சைலன்சர்களை மாற்றி அதிக சத்தம்  எழுப்பும் வாகன ஓட்டிகளால் மக்கள் பாதிப்பு

திருவாடானை : திருவாடானை, தொண்டி முக்கிய தெருக்களில் இளைஞர்கள் சிலர் டூவீலர்களில் சைலன்சர்களை மாற்றி அதிக சத்தத்துடன் செல்வதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். திருவாடானை, தொண்டி, நம்புதாளை, எஸ்.பி.பட்டினம் போன்ற பல ஊர்களில் உள்ள முக்கிய தெருக்களில் தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இந்த ரோடுகளில் இளைஞர்கள் சிலர் தங்களது டூவீலர்களில் சைலன்சர் மாற்றுவது போன்ற மாடிபிகேஷன் செய்து ஓட்டுவதால் அதிக சப்தம் எழுகிறது. இதனால் குடியிருப்பு பகுதியில் வசிப்பவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். ஒரு சில இளைஞர்கள் வேண்டுமென்றே பல முறை ஒரே ரோட்டில் அங்கும், இங்குமாக அதிக சப்தத்துடன் அடிக்கடி டூவீலர் ஓட்டுவதால் பிற வாகன ஓட்டுநர்களுக்கு பெரும் தொல்லையாக இருக்கிறது. இது குறித்து மக்கள் கூறுகையில், சில டூவீலர்களில் டமார் என வெடிகுண்டு வெடிப்பது, நாய் குரைப்பது, குழந்தை அழுவது, ஆம்புலன்ஸ் போன்ற சத்தங்களை வைத்து ஓட்டுகின்றனர். இதனால் பெரும் பாதிப்பாக உள்ளது. ஆம்புலன்ஸ் தான் வருகிறதோ என பயந்து ஒதுங்கும் போது விபத்து ஏற்படுகிறது. பள்ளிகள், மருத்துவமனை வழியாக செல்லும் போது உடல் நல குறைவுடன் இருப்பவர்கள் டூவீலர் சத்தத்தால் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதே போன்று இதய நோய் உள்ளவர்களும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மாணவர்களுக்கும் கவன சிதறல்கள் ஏற்படுகிறது. அதிக சத்தத்துடன் டூவீலர் ஓட்டுபவர்களிடம் இருந்து போலீசார் வாகனத்தை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !