ஊருணியில் சேதமடைந்துள்ள படித்துறையால் மக்கள் அச்சம்
முதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே கண்ணன்கோட்டையில் ஊருணி படித்துறை சேதமடைந்து ஆபத்தான நிலையில் இருப்பதால் மக்கள் அச்சப்படுகின்றனர்.முதுகுளத்துார் அருகே ஆதனக்குறிச்சி ஊராட்சி கண்ணன்கோட்டை கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர்.இங்கு கிராமத்தில் உள்ள ஊருணியில் பருவமழை காலத்தில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு கிராமமக்கள் பயன்படுத்துகின்றனர். ஊருணி மிகவும் பயனுள்ளதாக இருந்து வருகிறது. கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு படித்துறை அமைக்கப்பட்டு தற்போது வரை பராமரிப்பு பணி செய்யப்படாததால் சுவரில் விரிசல் ஏற்பட்டு கற்கள் விழுந்து சேதமடைந்துள்ளது. குளிப்பதற்கு வரும் மக்கள் ஒருவித அச்சத்துடன் வந்து செல்கின்றனர்.இதனால் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அதிகாரிகள் ஆய்வு செய்து புதிய படித்துறை கட்டுவதற்கும், ஊருணியை துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.