இதம்பாடல் ஊராட்சியில் ஜல்ஜீவன் திட்டத்திற்கு பங்குத்தொகை வசூலிப்பு மக்கள் அதிருப்தி
சிக்கல்: சிக்கல் அருகே இதம்பாடல் ஊராட்சியில் ஜல் ஜீவன் திட்டத்திற்கு பயனாளிகளிடம் பங்குத்தொகை வசூலிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். இதம்பாடல் ஊராட்சியில் 5000 பேருக்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்திற்காக அப்பகுதியில் வீடுகள் தோறும் குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் ஒரு குடிநீர் இணைப்பிற்கு வீட்டிற்கு ரூ.1000 வீதம் வசூலிக்கின்றனர்.இதம்பாடலைச் சேர்ந்த பா.ஜ., கிளை தலைவர் வெங்கடேஷ் கூறியதாவது:கடலாடி ஒன்றியம் இதம்பாடல் ஊராட்சியில் ஜெ.ஜெ.எம்., ஸ்கீம் 2024 -25 மற்றும் பயனாளிகள் பங்குத்தொகை ரசீது என குறிப்பிடப்பட்டு வசூல் செய்யப்படுகிறது. பணம் செலுத்தியவர்களுக்கு மட்டுமே குடிநீர் இணைப்பு வழங்கப்படும் எனக் கூறுகின்றனர்.மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தில் அனைவருக்கும் தண்ணீர் கிடைக்க வேண்டும். உள்ளூரில் கிடைக்கக்கூடிய தண்ணீர் அனைவருக்கும் கிடைக்க வேண்டும். இந்நிலையில் இவற்றை ரூ.1000 வீதம் பெரும்பாலானவர்களிடம் வசூல் செய்து ரசீது வழங்குகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் ஜல் ஜீவன் திட்டத்திற்கு பணம் வசூலிக்காமல் இலவசமாக வீடுகள் தோறும் குடிநீர் வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.