உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஓராண்டாகியும் தீர்வு இல்லை கிராம சபை கூட்டத்தில் மனு

ஓராண்டாகியும் தீர்வு இல்லை கிராம சபை கூட்டத்தில் மனு

ராமநாதபுரம்,: பட்டணம்காத்தான் கிராம சபைக் கூட்டத்தில் கடந்தஆண்டு ரோடு போட வேண்டும் என மனு அளித்த நிலையில், நேற்றும் அதே மனுவை மகாத்மா காந்தி நகர் பகுதி மக்கள் அளித்தனர். காந்தி ஜெயந்தி அன்று நடைபெற இருந்த கிராம சபைக் கூட்டம் நிர்வாக காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டது. நேற்று தமிழகம் முழுவதும் உள்ள ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் நடந்தது. ராமநாதபுரத்தில் உள்ள ஊராட்சிகளில் காலை 11:00 மணிக்கு கிராம சபைக் கூட்டம் துவங்கியது.கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக கலந்துரையாடிய நிகழ்ச்சி அனைத்து ஊராட்சிகளிலும் ஒளிபரப்பு செய்யப்பட்டது. சாத்தான்கோன்வலசை ஊராட்சியில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் கலோன் கலந்து கொண்டு குறைகளை கேட்டறிந்தார். அவர் பேசியதாவது: சாத்தான்கோன்வலசை ஊராட்சியில் பொதுமக்கள் தெரிவித்துள்ள குறைகளுக்கு தீர்வு காணப்படும். மழைக்காலம் தொடங்கவுள்ளதால் வீடுகள் தோறும் கொசுமருந்து அடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மகளிர் உரிமை தொகை திட்டத்தில் பெறப்பட்ட மனுக்களின் விவரம் அரசுக்கு அனுப்பப்படும் என்றார். பட்டணம்காத்தான் ஊராட்சியில் நடந்த கூட்டத்தில் அப்பகுதியை சேர்ந்த நுாறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கிராம சபைக் கூட்டம் ஊராட்சி அலுவலகம் முன்பு நடந்ததால் பந்தல் போடப்பட்டிருந்தது. அதில் அலுவலர்கள் அமர்வதற்கான இடம் மட்டும் இருந்த நிலையில் கூட்டத்திற்கு வந்த மக்கள் வெயிலிலும், மரத்தின் நிழலிலும் அமர்ந்திருந்தனர். மகாத்மா காந்தி நகர் 12 வது வார்டு மக்கள் தங்கள் பகுதியில் தார் சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஏற்கனவே கடந்த ஆண்டு அக்.,2ல் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் இதே மனுவை கொடுத்தும் தற்போது வரை ரோடு அமைக்காத நிலையில் இந்த ஆண்டும் அதே மனுவை தேதியை மட்டும் மாற்றி கொடுத்துள்ளதாக வேதனை தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ