கிழக்கு கடற்கரை சாலையில் கால்நடை கழிவுகள் குவியல்
சாயல்குடி: சாயல்குடி நகர் நுழைவாயில் பகுதியில் கிழக்கு கடற்கரை சாலை செல்லும் வழியில் கால்நடைகளின் சாணக் கழிவுகள் அதிகளவு கொட்டப்படுகின்றன.பொதுமக்கள் கூறியதாவது: சாயல்குடி பேரூராட்சி அலுவலகத்திற்கு முன்பு கிழக்கு கடற்கரை சாலை ஓரத்தில் கண்மாய் கரையின் வடக்கு பகுதியில் அதிகளவு கால்நடைகளின் சாணக் கழிவுகள் வரிசையாக கொட்டப்பட்டு வருகிறது.இவற்றை மொத்தமாக சேகரித்து வயல்களில் கொட்டுவதற்காக வைத்துள்ளனர். இதனால் துர்நாற்றம் வீசுவதால் வாகனங்களில் பயணிப்போர் மூக்கை பொத்தியபடி பயணிக்கின்றனர். மழைக்காலங்களில் தண்ணீர் வழிந்தோடி சாலையில் முழுவதும் சேறும் சகதியுமாக மாறுகிறது. எனவே சாயல்குடி பேரூராட்சி நிர்வாகத்தினர் கால்நடை கழிவுகளை கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுத்து, அதற்கான வழிகாட்டுதலை வழங்க வேண்டும் என்றனர்.