மழையால் சேதமடைந்த ரோடுகளை சீரமைக்கலாமே.. வாகன ஓட்டிகள் வேண்டுகோள்
பரமக்குடி : பரமக்குடி நகராட்சி பகுதியில் மழையால் ரோடுகள் சேதமடைந்த நிலையில் உடனடியாக சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.பரமக்குடி நகராட்சி 36 வார்டுகளில் பேவர் பிளாக் தளம் மற்றும் தார் ரோடுகள் அமைக்கப்பட்டுள்ளது. ஓராண்டாக பல்வேறு ரோடுகள் புதுப்பிக்கப்பட்ட நிலையில் சில பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடந்துள்ளது. அவ்வப்போது பரமக்குடியில் பெய்து வரும் மழையால் கழிவுநீர் ரோடுகளில் தேங்குவதால் சேதமடைந்துள்ளன.பரமக்குடி காந்தி சிலை, ஆர்ச், சவுகத் அலி ரோடு, உழவர் சந்தை மற்றும் எமனேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்ட தார் ரோடுகளில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் தடுமாறுகின்றனர். மேலும் பள்ளி மாணவர்கள் சைக்கிளில் செல்லும் போது விபத்து ஏற்படுகிறது.பல கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட ரோடுகள் சேதமடையும் நிலையில் உடனுக்குடன் சீரமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஒட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.