கடலாடி பஸ் ஸ்டாண்ட் நுழைவு பகுதியில் ஆபத்தான கம்பிகள் கண்டுகொள்ளாத போலீசார்
கடலாடி : கடலாடி பஸ் ஸ்டாண்டிற்குள் நாள்தோறும் ஏராளமான டவுன் பஸ்கள் மற்றும் தனியார் பஸ்கள் வந்து செல்கின்றன. இந்நிலையில் பஸ் ஸ்டாண்ட் நுழைவு வாயில் பகுதி எம்.ஜி.ஆர்., சிலை அருகே ஆபத்தான முறையில் பிளக்ஸ் போர்டு கம்பிகளை சுவற்றில் சாய்த்து வைக்கும் போக்கு தொடரவே செய்கிறது. தன்னார்வலர்கள் கூறியதாவது: கடலாடி பஸ் ஸ்டாண்ட் செல்லும் தார் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. புதிய தார் ரோடு அமைக்க கோரி முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இந்நிலையில் பஸ் ஸ்டாண்ட் நுழைவு வாயில் பகுதியில் பிளக்ஸ் போர்டு கம்பிகள் வைக்கும் இடமாக உள்ளது. இதனால் பஸ் ஸ்டாண்டிற்குள் நுழையக்கூடிய பஸ்களின் மீது மோதி விபத்திற்குள்ளாகும் வகையில் இரும்பு கம்பிகள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே டூவீலர்களாலும் பஸ் ஸ்டாண்டில் பல பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில் பயணிகள் மற்றும் பஸ்சிற்கு இடையூறாக உள்ளது. காலை, மாலை நேரங்களில் கடலாடி போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.