மேலும் செய்திகள்
ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா விவசாயிகள் ஏமாற்றம்
01-Dec-2024
ஆர்.எஸ்.மங்கலம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் குண்டு மிளகாய் வத்தல் விலை சரிவடைந்து கிலோ ரூ.150க்கு விற்கிறது. விலை உயர்வை எதிர்பார்த்து இருப்பு வைத்திருந்த விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் நெல்லுக்கு அடுத்தபடியாக குண்டு மிளகாய் சாகுபடி நடக்கிறது. குறிப்பாக ராமநாதபுரத்தில் சாகுபடி செய்யப்படும் குண்டு மிளகாய் அதிக மணம் கொண்டதுடன், அதிக காரம் மற்றும் அதிக மிளகாய் சாந்து நிறைந்து காணப்படுவதால், தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளிலும், இந்த வகை மிளகாய் வத்தலுக்கு மவுசு உள்ளது. ஆர்.எஸ். மங்கலம், முதுகுளத்துார், பரமக்குடி, இளையான்குடி பகுதிகளில் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.குண்டு மிளகாய் வத்தலை கொள்முதல் செய்த வியாபாரிகள், அதிகமாக சேமித்து வைத்தனர். இதனால் சீசன் இல்லாத நிலையிலும் விலை உயரவில்லை. கடந்தாண்டில் இக்காலகட்டத்தில் குவிண்டால் ரூ.22 ஆயிரம் முதல் ரூ.28 ஆயிரம் வரை விற்றது. ஆனால் தற்போது குவிண்டால் ரூ.9000 முதல் ரூ .12ஆயிரத்திற்கு விற்கிறது. இதனால் விவசாயிகளுக்கு குவிண்டாலுக்கு ரூ.16 ஆயிரம் இழப்பு ஏற்பட்டுள்ளது. விலை உயர்வை எதிர்பார்த்து இருப்பு வைத்திருந்த விவசாயிகள் கடும் ஏமாற்றத்தை சந்தித்துள்ளனர். அதே நேரத்தில் சில்லறையில் தரத்திற்கு ஏற்ப கிலோ ரூ.150 வரை விற்கிறது.
01-Dec-2024