தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஜூலை 14 முதல் காலவரையற்ற ஸ்டிரைக்
ராமநாதபுரம்:தமிழக மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தினர் எடையாளர்களை நியமிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 27 ல் கலெக்டர் அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம், ஜூலை 14 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளனர்.ராமநாதபுரத்தில் தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்க மாநில பொது செயலாளர் பாலகிருஷ்ணன், கவுரவ பொது செயலாளர் குப்புசாமி கூறியதாவது: ரேஷன் கடைகளில் புளூடூத் மூலம் மின்னணு எடை தராசு இணைக்கப்பட்டு விற்பனை செய்வதால் ஒரு ரேஷன் கார்டுக்கு பொருள் விநியோகம் செய்ய 8 முதல் 10 நிமிடங்களாகிறது. ஒரு நாளில் 50 கார்டுகளுக்கு மேல் உணவுப்பொருள் விநியோகம் செய்ய முடியாததால் பணியாளர்கள் புகார்களுக்கு உள்ளாகும் நிலை உள்ளது. புளூடூத் மூலம் நடக்கும் விற்பனையை நிறுத்த வேண்டும். நுகர்பொருள் வாணிப கழகத்தில் இருந்து கடைகளுக்கு நகர்வு செய்யப்படும் போது அரிசி மூடைக்கு 5 கிலோ வரையும், சர்க்கரை, பருப்பு, கோதுமைக்கு 2 கிலோ வரையும் எடை குறைவாக வழங்கப்படுகிறது. இதனை சரியான எடையில் அளவு குறையாமல் வழங்க வேண்டும்.முழு நேர கடைகளுக்கு புதிய இயந்திரம், பகுதி நேர கடைக்கு வழங்கப்பட்டுள்ள பழைய இயந்திரம் பயன்பாட்டில் உள்ளது. இதில் கருவிழி, கைரேகை பதிவு ஆகிய இரு முறைகளிலும் பதிவு செய்யும் முறையை செயல்படுத்த வேண்டும். ரேஷன் கடைகளில் 40 சதவீதம் மகளிரும், 5 சதவீதம் மாற்றுத்திறனாளிகளும் பணியில் உள்ளனர். ரேஷன் கடைகளுக்கு எடையாளர்ஒருவரை கூடுதலாக நியமிக்க வேண்டும். விடுமுறை நாளில் நகர்வு பணிக்கு உத்தரவிட கூடாது. இக்கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கம் சார்பில் அடுத்தடுத்து போராட்டங்கள் நடக்கவுள்ளன என்றனர்.