உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஏசி, பேன், பிரிட்ஜ் போட்டால் மின்தடை அதிகாரிகள் கூறிய பதிலால் அதிர்ச்சி பொதுமக்கள் முற்றுகை

ஏசி, பேன், பிரிட்ஜ் போட்டால் மின்தடை அதிகாரிகள் கூறிய பதிலால் அதிர்ச்சி பொதுமக்கள் முற்றுகை

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் தொடர் மின்தடை ஏற்பட்டு வந்த நிலையில் ஏ.சி, பேன், பிரிட்ஜ் பயன்படுத்தினால் மின் தடை ஏற்படும் என மின்வாரிய அதிகாரிகள் கூறியதால் பொதுமக்கள் கொந்தளித்து மின்வாரியத்தை முற்றுகையிட்டனர்.ஆர்.எஸ்.மங்கலம் கோழியார்கோட்டை பகுதியில் டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட பழுதால் 10 நாட்களாக தொடர் மின்தடை ஏற்பட்டு வருகிறது. டிரான்ஸ்பார்மர் பழுதை சரி செய்வதும் பின் பழுதடைவதுமாக கடந்த ஒரு வாரமாக பிரச்னை இருந்து வருகிறது.சில தினங்களுக்கு முன்பு டிரான்ஸ்பார்மர் பழுதை சரிசெய்த மின்வாரிய அதிகாரிகள் இப்பகுதி மக்கள் ஏ.சி., பேன், பிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்டவைகளை அதிகம் பயன்படுத்துவதால் டிரான்ஸ்பார்மர் பழுது ஏற்பட்டு மின் தடை ஏற்படுகிறது. அதனால், ஏ.ச, பேன் பயன்பாட்டை தவிர்த்தால் மட்டுமே இப்பகுதிக்கு முறையாக மின்சாரம் கிடைக்கும் என்றனர்.அதன் பிறகும் கடந்த நான்கு நாட்களாக முற்றிலும் மின்தடை ஏற்பட்டதால் முகமது கோயா தெரு, பள்ளிவாசல் தெரு, இக்பால் தெரு, குட்லு நகர், சிலம்பக்கார தெரு உள்ளிட்ட இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் பகுதியில் மக்கள் கடும் சிரமத்தை சந்தித்தனர்.இந்நிலையில் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று காலை 10:30 மணிக்கு மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். மின்வாரிய அதிகாரிகளின் பதில் திருப்தி அளிக்காததால் அங்கிருந்து புறப்பட்ட பொதுமக்கள் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு மின்வாரிய அதிகாரிகளுக்கு கண்டனம் தெரிவித்தனர்.தாசில்தார் அமர்நாத், ஏ.எஸ்.பி., தனுஷ் குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் இன்று (ஏப்.17) மாலைக்குள் நிரந்தர தீர்வு ஏற்படும் வகையில் மின் பிரச்னை தீர்க்கப்படும் என உத்திரவாதம் அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ