ரெகுநாதபுரத்தில் மக்கள் தொடர்பு முகாம்
ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் ஊராட்சியில் வருவாய்த் துறை, பேரிடர் மேலாண்மை துறை சார்பில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடந்தது.கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார். கோட்டாட்சியர் ராஜ மனோகரன் முன்னிலை வகித்தார். ரெகுநாதபுரம் ஊராட்சித் தலைவர் கோபாலகிருஷ்ணன் வரவேற்றார். திருப்புல்லாணி யூனியன் சேர்மன் புல்லாணி, சமூக பாதுகாப்பு திட்ட தனித் துணை தாசில்தார் தனலட்சுமி, கீழக்கரை தாசில்தார் ஜமால் முகமது, திருப்புல்லாணி பி.டி.ஓ., ராஜேஸ்வரி, ஊராட்சித் துணைத் தலைவர் ஜெகத்ரட்சகன், ஒன்றிய கவுன்சிலர் நாகநாதன் கலந்து கொண்டனர்.கலெக்டர் பேசுகையில், கிராமப் பகுதி மாணவர்கள் உயர்கல்வி பெறும் வகையில் தமிழ் புதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மக்களை தேடி மருத்துவமும் செயல்பட்டு வருகிறது. கால்நடை பராமரிப்புத் துறை மூலம் நடமாடும் மருத்துவ வாகனம் கிராமங்கள் தோறும் தேவையான சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றார்.பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு 146 பேருக்கு ரூ.1.18 கோடியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.நிலுவையில் உள்ள மனுக்கள் மீது விரைவில் உதவிகள் வழங்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.