ராமநாதபுரம் பஸ் ஸ்டாண்டில் பஸ்கள் இல்லாததால் தவித்த பொதுமக்கள்
ராமநாதபுரம் : -தீபாவளி விடுமுறை முடிந்து பணிபுரியும் இடங்களுக்கு செல்வதற்காக ராமநாதபுரம் பஸ் ஸ்டாண்டில் காத்திருந்த பயணிகள் தவித்தனர்.தீபாவளி பண்டிகை முன்னிட்டு தங்களது சொந்த ஊர்களில் பண்டிகை கொண்டாடவந்தவர்கள் தங்கள் பணிபுரியும் இடங்களுக்கு செல்வதற்காக ராமநாதபுரம் பஸ் ஸ்டாண்டில்நேற்று காலை முதல் காத்திருந்தனர். அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் பெரும்பான்மையான பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும் பயணிகள் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் பஸ் ஸ்டாண்டில் காத்திருக்கும் பயணிகள் கூட்டம்அதிகரித்தது. போதுமான சிறப்பு பஸ்கள் இல்லாமல் அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தவித்தனர். அப்படியே பஸ் இருந்தாலும் அதற்கான டிரைவர்கள், கண்டக்டர்கள் இல்லாமல் மதுரை, திருச்சி, கன்னியாகுமரி, திருச்செந்துார், வேளாங்கண்ணி, காரைக்குடி, தேவகோட்டை, தஞ்சாவூர், நாகபட்டினம் போன்ற பகுதிகளுக்கு போதுமான பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் பல மணி நேரம் பஸ் ஸ்டாண்டில் காத்திருந்து சிரமப்பட்டனர்.