கிராம சபை கூட்டத்தில் பங்கேற்க ஆர்வம் காட்டாத பொதுமக்கள்; சம்பிரதாயத்திற்கு நடத்தப்படுகிறது
திருப்புல்லாணி : திருப்புல்லாணி, கடலாடி, மண்டபம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் நடந்த கிராம சபை கூட்டங்கள் சம்பிரதாயத்திற்கு நடந்தது போல் இருந்தது. பொதுமக்கள் பங்களிப்பு குறைவாக இருந்தது. அரசின் நலத்திட்டங்களை அறிந்து கொள்ளவும் பயனாளிகளுக்கு கிடைக்கக்கூடிய சலுகைகள் மற்றும் திட்டத்தில் வழங்கக்கூடிய நடைமுறை சிக்கல்களை தெரியப்படுத்தி குறைகளை நிவர்த்தி செய்வதற்கும் கிராம சபை கூட்டங்கள் பயன்படுகின்றன. தற்போது நடந்த கிராம சபை கூட்டங்களில் அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்று குறைகளை சுட்டிக்காட்டுவதற்கு உரிய விழிப்புணர்வு இன்றி இருப்பதாக தன்னார்வலர்கள் வேதனை தெரிவித்தனர். தன்னார்வலர்கள் கூறியதாவது: குடிநீர், சாலை வசதி, சுகாதாரம், மின்சாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் சுட்டிக்காட்டுவதற்கும், அரசிடமிருந்து மேலும் பல கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு வலியுறுத்துவதற்கும் கிராம சபை கூட்டங்கள் அவசியமாக உள்ளன. இவற்றில் 100 நாள் வேலை செய்யக்கூடிய பணியாளர்களையும் குறிப்பிட்ட வேண்டப்பட்ட நபர்களையும் மட்டுமே அழைத்து விரைவில் பெயரளவிற்கு சம்பிரதாயத்திற்கு கூட்டங்களை நடத்தி முடிக்கின்றனர். பெரும்பாலான கிராம சபை கூட்டங்களில் நடக்கக்கூடிய தீர்மானங்கள் பற்றிய விபரங்கள் தெரியவில்லை. சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களும் குறைவாகவே பங்கேற்கின்றனர். இதனால் குறைகளை சுட்டிக்காட்ட வழியின்றி உள்ளது. எனவே இனி வரக்கூடிய கிராம சபை கூட்டங்களில் பொதுமக்களுக்கு உரிய விழிப்புணர்வு, அறிவிப்பு செய்ய வேண்டும். முந்தைய கிராம சபை கூட்டங்களில் தீர்மானமாக கொண்டுவரப்பட்ட திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.