உரங்களுக்கு அரசு நிர்ணயித்த விலை பட்டியல் வெளியீடு
திருவாடானை: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக அரசு நிர்ணயித்த உரவிலை பட்டியலை அதிகாரிகள்உடனடியாக வெளியிட்டனர்.ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயப் பணிகள்துவங்கிய நிலையில் ரசாயன உரங்களுக்கு அரசு நிர்ணயம் செய்த விலை தெரியாமல் விவசாயிகள் குழப்பம் அடைந்தனர். இதுகுறித்து நேற்று முன்தினம் தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக உரங்களின் விலை பட்டியல் வெளியிடப்பட்டது. இது குறித்து ராமநாதபுரம்மாவட்ட வேளாண் இணை இயக்குநர் பாஸ்கரமணியன் கூறியதாவது:ராமநாதபுரம் மாவட்டத்தில் செப்., அக்., மாதங்களில் பெய்த 187 மி.மீ., மழையை பயன்படுத்தி நெல், சிறுதானியங்கள், பயறு வகை பயிர்கள் உள்ளிட்ட வேளாண் பயிர்கள் ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 500 எக்டேரில் விதைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, களை எடுத்தல், மேலுரம் இடுதல் உள்ளிட்ட விவசாய பணிகள் துவங்கியுள்ளது. நடப்பு சம்பா பருவத்தில்சாகுபடி செய்யப்படும் பயிர்களுக்கு தேவையான யூரியா, டி.ஏ.பி., பொட்டாஷ் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்கள் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அரசு நிர்ணயம் செய்துஉள்ள விலையில் உரங்கள்விற்பனை செய்யப்பட வேண்டும். மீறினால் உர உரிமம் ரத்து செய்யப்படும்.உரங்களின் விற்பனை விலை விவரம்:அனைத்து நிறுவனங்களின் 45 கிலோ யூரியா மூடை ரூ.266.50, டி.ஏ.பி., ரூ.1350, பாக்டம்பாஸ் ரூ.1225, இப்கோ ரூ.1200, கிரிப்கோ ரூ.1200, ஜி.எப்.எல்., ரூ.1250, கோரமண்டல் ரூ.1300, கோரமண்டல் 16:20:0:13 ரூ.1700, கிரிப்கோ ரூ.1470, இப்கோ 10:26:26 ரூ.1470, பாக்டம்பாஸ் 15:15:15 ரூ.1250, ஐ.பி.எல்., ரூ.1375, ஐ.பி.எல்., பொட்டாஷ் ரூ.1500, பாக்டம்பாஸ் ரூ.1250, ஐ.பி. எல்., ரூ.1375, கோரமண்டல் துாள்வடிவ சூப்பர் பாஸ்பேட் ரூ.575, ஸ்பிக் அமோனியம் குளோரைடு ரூ.2610. உர விற்பனையாளர்கள் உரங்களின் இருப்பு விபரம் மற்றும் விலைப் பட்டியலை விவசாயிகளுக்கு தெரியும் வண்ணம்வைக்க வேண்டும். விவசாயிகளுக்கு கண்டிப்பாக ரசீது வழங்க வேண்டும். விவசாயிகள்கேட்கும் உரங்களை மட்டும் விற்பனை செய்ய வேண்டும். பிற உரங்களை வாங்குமாறு கட்டாயப்படுத்த கூடாது. சில்லரை உர விற்பனையாளர்கள் ஆதார் அட்டை கொண்டு, கைரேகை பதிவு செய்து உரம் வழங்க வேண்டும். ஆதார் அட்டை இல்லாமல்உரம் வழங்க கூடாது. உர விற்பனையை முனை இயந்திரம் மூலமாக மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். கூடுதல் விலைக்கு விற்பனை செய்பவர்கள் குறித்து வேளாண் உதவி இயக்குநருக்கு அலைபேசி எண் 94430 94193, வேளாண்மை அலுவலர் அலைபேசி எண் 88381 38353 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.