வனப்பகுதிகளில் முயல் வேட்டை ரோந்து அவசியம்
கீழக்கரை: கீழக்கரை அருகே மாயாகுளம், தச்சன் ஊரணி, ஏர்வாடி செல்லக்கூடிய வனப்பகுதி மற்றும் மன்னார் வளைகுடா கடற்கரையோர பகுதிகளில் அதிகளவு முயல்கள் வாழ்கின்றன. குறிப்பாக மாயாகுளம், புல்லந்தை உள்ளிட்ட சுற்றுவட்டார வனப்பகுதிகளில் கண்ணி வலை வைத்து முயல்களை பிடிக்கின்றனர். இயற்கை ஆர்வலர்கள் கூறியதாவது: தடை செய்யப்பட்ட அரிய வகை உயிரினங்களை வேட்டையாடுவது குற்றம். அந்த வகையில் சட்டவிரோதமாக கண்மாய் மற்றும் அடர்ந்த வனப் பகுதிகளில் முயல்களை கண்ணி வைத்து வேட்டையாடுகின்றனர். துணைக்கு வேட்டை நாய்களை பயன்படுத்தும் போக்கும் அதிகரித்து வருகிறது. எனவே வனத்துறை அலுவலர்கள் கண்மாய் உள்ளிட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக முயல்களை வேட்டையாடும் கும்பலை கட்டுப்படுத்த வேண்டும் என்றனர்.