பரமக்குடியில் ரயில்வே அஞ்சல் பிரிப்பகம் தொடர வேண்டும்; தர்மர் எம்.பி., வலியுறுத்தல்
பரமக்குடி: பரமக்குடியில் ரயில்வே அஞ்சல் பிரிப்பகம் தொடர்ந்து செயல்பட வேண்டும் என தர்மர் எம்.பி., தபால் துறை மத்திய அமைச்சர் ஜோதிர் ஆதித்யா எம்.சிந்தியாவிடம் வலியுறுத்தியுள்ளார்.பரமக்குடியில் இருந்து 100 கி.மீ., சுற்றளவில் தபால்களை கையாளும் வகையில் பரமக்குடியில் ரயில்வே அஞ்சல் பிரிப்பகம் 40 ஆண்டுகளாக செயல்படுகிறது. 2500க்கு மேற்பட்ட ஸ்பீடு தபால்கள், 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட சாதாரண தபால்கள் கையாளப்படுகிறது.இந்நிலையில் தபால் துறை மதுரை அஞ்சல் துறையுடன் பரமக்குடி அலுவலகத்தை இணைத்து உத்தரவிட்டது. இது குறித்து தினமலர் நாளிதழ் சுட்டிக்காட்டிய நிலையில் அனைத்து கட்சியினர், அமைப்பினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.தர்மர் எம்.பி., நேற்று முன்தினம் மத்திய தபால் துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய எம்.சிந்தியா வை சந்தித்தார். அப்போது தபால்களை முறையாக கையாண்டு உடனுக்குடன் சென்று சேரும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். 40 ஆண்டுகளாக இயங்கும் அஞ்சல் பிரிப்பகத்தை மாற்றும் உத்தரவை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி பேசினார்.நாடு முழுவதும் பல்வேறு அஞ்சல் அலுவலகங்கள் இணைக்கப்படுவதாகவும், பரமக்குடி அஞ்சல் பிரிப்பகம் மாற்றும் உத்தரவு குறித்து பரிசீலிக்கப்படும் என மத்திய அமைச்சர் தெரிவித்ததாக தர்மர் எம்.பி., கூறினார்.