பாம்பன் புதிய பாலத்தில் ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் ஆய்வு : இன்று சோதனை ஓட்டம்
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் அருகே பாம்பன் புதிய ரயில் பாலத்தில் ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் ஏ.எம்.சவுத்ரி நேற்று ஆய்வு செய்தார். இன்று சோதனை ஓட்டம் நடக்கிறது.ராமேஸ்வரம் தீவை இணைக்கும் வகையில் பாம்பன் கடலில் ரூ.550 கோடியில் அமைக்கப்பட்ட புதிய ரயில் பாலம் கட்டுமானப் பணிகள் முடிவடைந்த நிலையில் டிச.5 க்குள் திறப்பு விழா நடத்த ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.இந்நிலையில் புதிய பாலத்தின் உறுதித்தன்மை குறித்து இறுதி ஆய்வு செய்ய நேற்று ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் ஏ.எம்.சவுத்ரி பாம்பன் வந்தார். பின் புதிய பாலத்தின் இரும்பு கர்டர்கள், துாண்கள் மற்றும் துாக்கு பாலத்தின் செயல்பாடுகள், அதன் உறுதித் தன்மை குறித்து ஆய்வு செய்து ரயில்வே பொறியாளர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.மேலும் ராமேஸ்வரத்தில் ரூ.90 கோடியில் மறு சீரமைக்கப்படும் ரயில்வே ஸ்டேஷன் கட்டுமானப் பணி மற்றும் பயணிகள் வசதிக்காக 1 முதல் 4-வது பிளாட்பாரத்தின் பணிகள், கழிப்பறை, குடிநீர் வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்.இன்று காலை 8:00 முதல் மதியம் 2:30 மணி வரை மண்டபம் ரயில்வே ஸ்டேஷன் முதல் பாம்பன் பாலம் வழியாக ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷன் வரை அதிவேகத்தில் ரயில் இன்ஜின், ஆய்வக கருவி பொருத்திய பெட்டிகளுடன் சோதனை ஓட்டம் நடக்க உள்ளது.