உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பரமக்குடியில் மழை: நெசவாளர் வீடுகளில் புகுந்தது கழிவு நீர்

பரமக்குடியில் மழை: நெசவாளர் வீடுகளில் புகுந்தது கழிவு நீர்

பரமக்குடி : பரமக்குடி நகராட்சி ஜி.வி.பந்த் தெருவில் முறையற்ற வாறுகாலால் மழைநீர் செல்ல வழியின்றி 10க்கும் மேற்பட்ட நெசவாளர்களின் வீடுகளுக்குள் மழைநீருடன் கழிவு நீர் புகுந்ததால் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. பரமக்குடி நகராட்சி 12வது வார்டில் கோவிந்த வல்லப பந்த் தெரு உள்ளது. 30 அடி அகலம் வரை உள்ள இந்த ரோட்டில் சிறிய அளவில் வாறுகால் உள்ளது. மதுரை, ராமநாதபுரம் நெடுஞ்சாலை ஓரத்தில் அமைக்கப்பட்ட ராட்சத வாறுக்கால் வழியாக வெளியேறும் கழிவு நீர் ஒட்டுமொத்தமாக இத்தெருவை கடந்து செல்கிறது. மேலும் ஒவ்வொரு முறையும் ரோடு அமைக்கும் போதும் பழைய ரோட்டை பெயர்ந்து எடுக்காததால் மேடாகி பழைய ஓட்டு வீடுகள் அனைத்தும் பள்ளங்களில் சென்றுள்ளது. இந்நிலையில் நேற்று மதியம் 2:00 மணிக்கு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது. அப்போது நெசவாளர் வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் வாழ்வதாரம் பாதிக்கப்பட்டது. மேலும் ஒவ்வொரு வீடுகளிலும் நெசவுப் பட்டறையை அமைத்து தொழில் செய்வதால் மழைக் காலங்களில் தொழில் பாதிக்கப்பட்டு வீடுகளில் தங்க முடியாத நிலை உண்டாகிறது. இது குறித்து ஜி.வி. பந்த் தெரு மக்கள் சார்பில் நவநீதகிருஷ்ணன் முதல்வரின் தனி பிரிவிற்கு மனு அனுப்பியுள்ளார். அவர் கூறியதாவது: ஏப்.,25ல் நகராட்சி அளித்த பதில் மனுவில் 12வது வார்டு வாறுகால் சீரமைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. பின் மே 23ல் வந்த பதிலில் கழிவுநீர் கால்வாய் சீரமைக்க திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு உள்ளதாக வந்துள்ளது. ஆகவே நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதேபோல் ஆர்ச், காந்தி சிலை பகுதி, உழவர் சந்தை என அனைத்து பள்ளமான பகுதிகளிலும் பல மணி நேரம் தண்ணீர் தேங்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ