ராமேஸ்வரம் கோயிலுக்குள் மழை நீர் புகுந்தது
ராமேஸ்வரம்:- ராமேஸ்வரத்தில் பெய்த மழையால் ராமநாத சுவாமி கோயிலுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் பக்தர்கள் சிரமத்துடன் நடந்து சென்றனர். ராமேஸ்வரத்தில் நேற்று காலை பெய்த மழையில் கோயில் நான்கு ரதவீதி சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதில் கோயில் அம்மன் சன்னதி முகப்பு மண்டபத்தில் கிழக்கு ரதவீதி சாலையில் ஓடிய மழை நீர் புகுந்ததால் அரை அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கியது. இவ்வழியாக அம்மனை தரிசனம் செய்து விட்டு திரும்பிய பக்தர்கள் சிரமத்துடன் நடந்து சென்றனர். இதன் பின் கோயில் ஊழியர்கள் மழை நீரை வெளியேற்றினர். ரதவீதியில் ஓடிய மழை நீர் அக்னி தீர்த்த கடலில் கலந்ததால் தெற்கு ரதவீதி சாலை சகதியாக கிடந்தது.