நெடுஞ்சாலையில் மழைநீர்: வாகன ஓட்டிகள் பாதிப்பு
பரமக்குடி: பரமக்குடியில் பரவலாக பெய்து வரும் மழையால் தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். பரமக்குடியில் ஒரு வாரமாக அவ்வப்போது மழை பெய்கிறது. கனமழை பெய்யாததால் இன்னும் உழவுப் பணிகளை துவக்க முடியாத நிலையில் விவசாயிகள் உள்ளனர். இச்சூழலில் பரமக்குடி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் பெய்யும் ஒரு மணி நேர மழைக்கு ரோட்டில் தண்ணீர் தேங்குகிறது. ஒவ்வொரு முறை மழை பெய்யும் போதும் மக்கள் மகிழ்ச்சியடைந்தாலும், பல மணி நேரம் கழித்து தண்ணீர் வடிகிறது. இதனால் பாதசாரிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். வாகன ஓட்டிகள் தடம் தெரியாமல் ஊர்ந்து செல்லும் நிலை இருக்கிறது. எனவே தேசிய நெடுஞ்சாலை உட்பட நகரில் முக்கிய பகுதிகளில் தண்ணீர் தேங்கும் இடங்களை கண்டறிந்து அதிகாரிகள் வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.