கையுறையின்றி கழிவுகளை அகற்றும் ராமநாதபுரம் துாய்மைப் பணியாளர்கள் கேள்விக்குறியாகும் பாதுகாப்பு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகராட்சியில் பணிபுரியும் துாய்மைப் பணியாளர்கள் கையுறை, முகக்கவசம் அணியாமல் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதனால் அவர்களின் சுகாதாரம், பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. ராமநாதபுரம் நகரில் உள்ள 33 வார்டுகளில்பாதாள சாக்கடை திட்டம் படுதோல்வி அடைந்துள்ளது. குழாய்கள் சேதமடைந்து பல இடங்களில் கழிவுநீர் தேங்கியும், ரோட்டில் ஒடி ஊருணிகளில் கலக்கிறது. அவ்விடங்களை கண்டறிந்து கழிவுகளை அகற்றும் பணியில் நகராட்சி துாய்மைப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். இது போன்று தெருக்களில் குப்பை அகற்றும் பணியிலும் ஈடுபடுகின்றனர். அப்போது அவர்கள் கையுறையின்றியும், முகக்கவசம் அணியாமல் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபடுகின்றனர். இதனால் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. துாய்மை பணியாளர்களின் நலனில் அதிகாரிகள் அக்கறை காட்டுவது இல்லை என மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே ஊரை சுத்தம் செய்யும் துாய்மைப் பணியாளர்களை பாதுகாக்க அவர்களுக்குரிய முககவசம், கையுறை போன்ற உபகரணங்களை வழங்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.