அபுதாபியில் குப்பைக்கு நடுவில் வாழும் ராமநாதபுரம் வாலிபர் * வைரலாகும் வீடியோவால் அதிர்ச்சி
ராமநாதபுரம்:ராமநாதபுரத்தை சேர்ந்த வாலிபர் துபாய்க்கு வேலைக்கு சென்ற நிலையில் ஊர் திரும்ப முடியாமல் அபுதாபியில் குப்பையில் வாழ்வதாக அவர் பேசியுள்ள வீடியோ பரவுகிறது.ராமநாதபுரம் கொத்த தெருவைச் சேர்ந்த நடராஜன் மகன் முத்துக்குமார் 35. இவரது மனைவி கீர்த்திகா. இரு குழந்தைகள் உள்ளனர். குடும்ப வறுமையால் துபாய்க்கு 2 ஆண்டுகளுக்கு முன் வேலைக்கு சென்றார். ஆறு மாதங்களுக்கு முன் அவர் பணிபுரிந்த நிறுவனத்தில் போர்மேன் உடன் ஏற்பட்ட தகராறால் வெளியேற்றப்பட்டார். கம்பெனியில் அவரின் பாஸ்போர்ட் சிக்கிக் கொண்டதால் நாடு திரும்ப முடியவில்லை. இதனால் 6 மாதங்களாக அபுதாபியில் வீதியில் சாலையோரம் உணவுக்கும், தங்குவதற்கும் வழியின்றி குப்பைக்கு மத்தியில் படுத்து உறங்கி வருகிறார்.இதனை கவனித்த தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் முத்துகுமாரின் குமுறலை வீடியோவாக பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது ராமநாதபுரத்தில் வைரலாகி வருகிறது.அந்த வீடியோவில் முத்துகுமார் கூறியிருப்பதாவது: நானும், விருதாச்சலத்தைச் சேர்ந்தவரும் 6 மாதங்களாக அபுதாபியில் குப்பைக்கு மத்தியில் படுத்து துாங்குகிறோம். இங்குள்ள லேபர் கோர்ட்டிற்கு சென்றோம். துபாய் கோர்ட்டிற்கு செல்ல கூறுகின்றனர். எங்களால் அங்கு செல்ல முடியவில்லை. சாப்பிட்டிற்கே சிரமப்படுகிறோம் என கூறியிருக்கிறார்.அதிர்ச்சியுற்ற குடும்பத்தினர் முத்துக்குமாரை மீட்டு ராமநாதபுரம் அழைத்து வருவதற்கு அங்குள்ள இந்திய துாதரகம் மூலம் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.