மீன்துறை அதிகாரிகளை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் ஸ்டிரைக்
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் மீன்துறை அதிகாரிகளின் அலட்சியத்தை கண்டித்து நேற்று மீனவர்கள் மீன்பிடிக்காமல் வேலை நிறுத்தம் செய்தனர்.பெஞ்சல் புயல் எதிரொலியாக ராமேஸ்வரம் மீனவர்களுக்கு தடை விதித்து 8 நாட்களுக்கு பின் டிச.4ல் 500 விசைப்படகில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். இதில் அதிக மீன்கள் பிடிக்கும் ஆவலில் 125 படகுகளின் மீனவர்கள் மீன்துறையிடம் அனுமதி டோக்கன் பெறாமல் சென்றனர்.இதே நாளில் 14 மீனவர்கள் கைதானதை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் டிச.7ல் மீன்பிடிக்க செல்லாமல் ஸ்டிரைக் செய்தனர். இதையடுத்து நேற்று மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல ஒரு படகில் தலா 20 ஐஸ் பார்கள், உணவு பொருள்கள், எரிபொருள்களை ஏற்றி ஆயத்தமாகினர்.நேற்று காலை 8:00 மணிக்கு மீனவர்கள் டோக்கன் வாங்கிய போது 125 படகுகளுகு டோக்கன் வழங்கப்படாது என மீன்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனை கடித்து நேற்று காலை டோக்கன் வழங்கும் மீன்துறை அலுவலகத்தை மீனவர்கள் முற்றுகையிட்டனர். அதிகாரிகள் அலட்சியம்
இந்நிலையில் 125 படகுகளின் பதிவு எண்கள் குறித்து முன்கூட்டியே தெரிவிக்காமலும், நோட்டீஸ் பலகையில் ஒட்டாத மீன்துறை அதிகாரிகளின் அலட்சியப் போக்கை கண்டித்து மீனவர்கள் நேற்று மீன்பிடிக்க செல்லாமல் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். எந்தெந்த படகுகள் என தெரியாத நிலையில் நேற்று 500 படகுகளிலும் ஐஸ் பார்கள், உணவு பொருட்களை ஏற்றி வீணாகியதால் ரூ.20 லட்சம் நஷ்டம் ஏற்பட்டது.டிச.4ல் டோக்கன் வாங்கிய படகிற்கும், வாங்காதது போல் தவறாக எழுதி தற்போது டோக்கன் வழங்க மறுப்பது கண்டனத்திற்குரியது என மீனவர்கள் தெரிவித்தனர்.