| ADDED : அக் 14, 2025 06:43 AM
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று மூன்றாவது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் மீன்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயர்ந்துள்ளது. இலங்கை சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 30 பேரையும், 4 படகுகளையும் மத்திய, மாநில அரசுகள் உடன் விடுவிக்க வலியுறுத்தி அக்.,10 முதல் ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று 3வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்தப்பட்டு மீனவர்கள் வேலையின்றி வீடுகளில் முடங்கினர். இந்த ஸ்டிரைக்கால் மீன்வரத்தின்றி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இச்சூழலில் சிறிய ரக 60 விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் வலையிலும், தனுஷ்கோடி கடலில் கரை வலை, நாட்டுப்படகில் சிக்கும் மீன்களும் உள்ளூர் மீன் பிரியர்களுக்கு போதுமானதாக இல்லை. மேலும் மதுரை, கோவை, ராமநாதபுரம் பகுதிக்கு மீன்களுக்கு அனுப்ப முடியாமல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மீன்கள் விலை 50 சதவீதம் உயர்ந்துள்ளது.