திருவாடானை பள்ளிகளில் வாசிப்பு திட்டம் துவக்கம்
திருவாடானை : திருவாடானை வட்டாரப் பள்ளிகளில் வாசிப்புத் திறனை மேம்படுத்த ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை வாசிப்பு திட்டம் துவங்கியுள்ளது.கல்வித்துறை சார்பில் அரசு பள்ளி மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்துவதற்காக வாசிப்பு இயக்கம் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதில் குழந்தைகளின் வாசிப்பு நிலைகளுக்கு ஏற்ப நுழை, நட, ஓடு, பற என நான்கு பிரிவுகளில் புத்தகங்கள் தயாரிக்கப்படுகின்றன. இதில் இரண்டு கட்டப் புத்தகங்கள் வழங்கப்பட்டு மூன்றாம் கட்ட புத்தகங்கள் வழங்கும் பணி நடக்கிறது. நான்காம் கட்ட புத்தகங்கள் மாணவர்களின் படைப்புகளாக கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து வட்டார கல்வி அலுவலர்கள் கூறியதாவது:திருவாடானை வட்டாரத்தில் 77 அரசு தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இத் திட்டத்தின் கீழ் ஒன்று முதல் எட்டாம் வகுப்புகளுக்கு விவாதம், நடிப்பு, கலந்துரையாடல், கதை சொல்லுதல் வாசிப்பு திறன் நடத்தப்பட உள்ளது. வாசிப்பு இயக்கத்தின் அடிப்டைகளை புரிந்து கொண்டு நுழை, நட, ஓடு, பற என்ற நான்கில் ஏதேனும் ஒரு வகைகளின் கீழ் மாணவர் கதை இருக்க வேண்டும். இது குறித்து மாணவர்களை தயார்படுத்த தலைமை ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றனர்.