பனைமரப் பொருட்கள் தொழிலை ஊக்கப்படுத்த கடன் உதவி, அரசு மானியம் வழங்க கோரிக்கை
ஆர்.எஸ்.மங்கலம்: பனைமரப் பொருட்கள் உற்பத்திக்கு போதிய விலை கிடைக்காததாலும், இந்த தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. தொழிலை ஊக்கப்படுத்த வங்கி கடன் உதவி, அரசு மானியம் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.மாவட்டத்தில், தேவிபட்டினம், ஆர்.எஸ். மங்கலம், சாயல்குடி, நயினார்கோவில், முதுகுளத்துார் உட்பட பல்வேறு பகுதிகளிலும் ஏராளமான பனை தொழிலாளர்கள் உள்ளன.பனை மரத்தை அடிப்படையாகக் கொண்டு, பனை ஓலை, பனை மட்டை என அனைத்து பொருட்களையும் பயன்படுத்தி, வீட்டு உபயோகப் பொருட்களாக தொழிலாளர்கள் மாற்றி வருகின்றனர்.குறிப்பாக, பனை ஓலையில் இருந்து ஓலை பெட்டி, ஓலை பாய், சிறுவர்களுக்கான கிளுகிளுப்பை, விசிறிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களும், பனை மட்டையில் இருந்து அலுவலகம், வீடுகளை சுத்தம் செய்யும் கூட்டுமாறு உள்ளிட்ட பல்வேறு பொருட்களும் தொழிலாளர்கள் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.உற்பத்தி பொருள்களுக்கு போதிய விலை கிடைக்காததாலும், இந்த தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது.இது குறித்து கருஞ்சுத்தி அன்பரசன் கூறுகையில், பனை மட்டையிலிருந்து விளக்குமாறு செய்யும் தொழில் மூன்று தலைமுறையாக செய்து வருகிறோம். ஒரு விளக்கமாறு ரூ 70 வரை விற்பனை செய்கிறோம். இருப்பினும் இத்தொழிலை ஊக்கப்படுத்தும் வகையில் அரசின் கடன் உதவி, மற்றும் தொழில் பாதுகாப்பு கிடைப்பதில்லை.இதனால், எனது தலைமுறை உடன் இத்தொழில் முடிவுக்கு வரும் நிலையில் உள்ளது. எனவே பனை பொருள் உற்பத்திக்கு அங்கீகாரம் அளிப்பு கடனுதவி வழங்க அரசு முன்வர வேண்டும் என்றார்.