நீர் நிலைகளில் எச்சரிக்கை பலகை வைக்க கோரிக்கை
திருவாடானை : கோடை விடுமுறை காலத்தில் அசம்பாவிதங்களை தடுக்க நீர் நிலைகளில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பை தீவிரப்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது.பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் கிராமங்களில் உள்ள குளங்கள், குட்டைகளில் கண்காணிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: விடுமுறை அறிவிக்கப்பட்ட உற்சாகத்தில் சிறுவர், சிறுமியர் பொழுது போக்க நீர் நிலைகளை தேடிச் செல்வர். திருவாடானை தாலுகாவில் கடந்த ஆண்டு பெய்த மழையால் கண்மாய்கள் நிரம்பின. விவசாயத்திற்கு நீர் தேவைப்படாததால் கண்மாய்களில் நீர் தேங்கியுள்ளது.அதே போல் ஊருணிகளிலும் தண்ணீர் தேங்கியுள்ளது. இவற்றை தேடி குளிக்கவும், நீச்சல் பழகவும் சிறுவர்கள் சென்று ஆபத்தில் சிக்குவது அடிக்கடி நடக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் ஆறு பேர் நீர்நிலைகளில் மூழ்கி இறந்துள்ளனர்.தற்போது எந்த நீர்நிலைகளிலும் எச்சரிக்கை பலகை வைக்கப்படவில்லை.அதனால் நீர் நிலைகளில் எச்சரிக்கை பலகைகள் அமைக்க வேண்டும். தடுப்புகள் அமைத்து கண்காணிக்க வேண்டும். அப்போது தான் அசம்பாவிதங்களை தடுக்க முடியும் என்றனர்.