அக்கிரமேசி கண்மாய்க்கு வைகை அணை தண்ணீர் வழங்க கோரிக்கை
பரமக்குடி, : ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வைகை அணை நீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில் அக்கிரமேசி உள்ளிட்ட கண்மாய்களுக்கு போதிய தண்ணீர் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வானம் பார்த்த பூமியாக உள்ள ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கண்மாய் பாசனம் பிரதானமாக இருக்கிறது. இதன்படி பார்த்திபனுார் மதகு அணையிலிருந்து வலது, இடது பிரதான கால்வாய்கள் மூலம் வைகை அணை நீர் பிரித்து விடப்படுகிறது.சில ஆண்டுகளாக இடது பிரதான கால்வாயில் கள்ளியடியேந்தல் பிரிவு கால்வாய் புனரமைக்கப்படாமல் இருந்த நிலையில் தண்ணீர் கிடைக்காத சூழல் நிலவியது. இதனால் நயினார்கோவில் ஒன்றியம் அக்கிரமேசி உள்ளிட்ட அப்பகுதி கண்மாய்களுக்கு நீர்வரத்து இல்லாமல் இருந்தது.ஆனால் கடந்த ஆண்டு சீரமைக்கப்பட்ட போதும் போதிய அளவு தண்ணீர் கிடைப்பதில்லை என கிராம மக்கள், விவசாயிகள் தெரிவிக்கின்றனர். ஆகவே தற்போது வரும் வைகை நீரை முறையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுப்பணித்துறை கீழ் வைகை வடிநில கோட்ட செயற் பொறியாளருக்கு விவசாயிகள் கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் மலைச்சாமி, அக்கிரமேசி பாசன விவசாயிகள் சங்கம் நாகலிங்கம் உள்ளிட்டோர் மனு அளித்துள்ளனர்.