சிதைந்து காணாமல் போன கால்வாய்களை துார்வார கோரிக்கை
பரமக்குடி: சிதைந்து காணாமல் போன கால்வாய்களை மீட்டு தரக் கோரி பரமக்குடி நீர்வளத்துறை செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு விவசாயிகள் கூட்டமைப்பினர் முற்றுகை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பினர் நேற்று காலை 11:00 மணிக்கு 200க்கும் மேற்பட்டோர் பரமக்குடி வேந்தோணி விலக்கு ரோட்டில் கூட்டினர். மாவட்ட செயலாளர் மலைச்சாமி தலைமையில் கோஷங்களை எழுப்பியபடி நீர் வளத்துறை அலுவலகம் நோக்கி ஊர்வலமாக சென்றனர். அப்போது அலுவலக கேட் மூடப்பட்டதையடுத்து ராமநாதபுரம் ரோட்டோரம் விவசாயிகள் அமர்ந்து முற்றுகையிட்டனர். பின்னர் போலீசார் மற்றும் எஸ்.டி.ஓ., சந்திரமோகன் உள்ளிட்டோர் முன்னிலையில் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் அர்ஜுனன் பேசினார். தொடர்ந்து சித்தார்கோட்டை பாசன கால்வாய் வைகை ஆற்றில் பாண்டியூர் அருகில் துவங்கி மும்முடிசாத்தான், அம்மாரி கண்மாய் வரை சுமார் 4000 ஏக்கர் பாசன பரப்பு உள்ளது. இப்பாதை முழுவதும் சிதைந்து காணாமல் போன நிலையில் சித்தார்கோட்டை கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். பார்த்திபனுார் மதகு அணையின் வலது பிரதான கால்வாய் மூலம் 154 கண்மாய்கள் பாசன வசதி பெறுகிறது. இதனை மீட்க வேண்டும். மேலும் 1960ம் ஆண்டு செட்டில்மென்ட் சர்வே வரைபடத்தின் அடிப்படையில் வைகை ஆறு பாசன கால்வாய்கள், கண்மாய்கள் அனைத்து நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். ஆறு உள்ளிட்ட நீர் நிலைகளில் குப்பை கொட்டுவதையும், கழிவு நீர் விடுவதையும் தடுக்க வேண்டும். 66 ஆண்டு களுக்கு முன்பு உருவாக்கப்பட்ட பூர்வீக பாசன கட்டமைப்பை ரூ.500 கோடி நிதி ஒதுக்கி முழுமையாக புனரமைப்பு செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.