எஸ்.ஆலங்குளத்தில் காய்ச்சலால் பாதிப்பு மருத்துவ முகாம் அமைக்க கோரிக்கை
சாயல்குடி: கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக சாயல்குடி சுற்றுவட்டார பகுதிகளில் அதிகளவில் காய்ச்சல் பாதிப்பு உள்ளதால் கிராம மக்கள் வீடுகளுக்குள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.சமீபத்தில் பெய்த பருவ மழையால் முறையாக வடிகால் வசதி இல்லாததால் தெருக்களில் தண்ணீர் குளம் போல் தேங்குகிறது.சாயல்குடி அருகே எஸ்.வாகைகுளம் ஊராட்சி எஸ்.ஆலங்குளத்தில் காய்ச்சலால் 25க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். எஸ்.ஆலங்குளம் மூர்த்தி 52, கூறுகையில், கிராமத்தில் ஜெகதீஸ்வரி 13, திருநீலகண்டேஸ்வரன் 9, கலைமதி 47, உள்ளிட்ட ஏராளமான கிராம மக்களுக்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளது. இதனால் தொண்டை வறண்டு போகுதல், நீர்ச்சத்து குறைபாடு, அதிக நேரம் தொடர் இருமல் உள்ளிட்டவைகள் ஏற்படுகிறது. கை, கால் வலி ஏற்படுகிறது.ஏராளமானோர் பள்ளி, கல்லுாரிகளுக்கு செல்ல முடியாமலும் வீடுகளில் முடங்கி உள்ளனர். தெருக்களில் தேங்கியிருக்கும் கழிவுநீரால் கொசுக்கள் உற்பத்தியாகி பகலிலும் இரவிலும் கடிக்கின்றன.எனவே மழைக்காலத்தில் காய்ச்சலால் பாதிப்பை சந்தித்துள்ள இப்பகுதி மக்களுக்கு சாயல்குடி சுகாதாரத்துறையினர் மருத்துவ முகாம் நடத்தி சிகிச்சையளிக்க வேண்டும் என்றார்.