உத்தரகோசமங்கையில் கோயில் முன்பு வாகனங்கள் நிறுத்துவதற்கு கட்டுப்பாடு
உத்தரகோசமங்கை: -தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக, உத்தரகோசமங்கை மங்களநாதர், மங்களேஸ்வரி அம்மன் கோயிலில் ராஜகோபுரம் அருகே வாகனங்களை நிறுத்துவதை தடுக்கும் வகையில் பாதுகாப்பு கம்பிகளை போலீசார் கட்டியுள்ளனர். உத்தரகோசமங்கையில் பார்க்கிங் வசதியின்றி ராஜகோபுரம் அருகே நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டு பக்தர்கள் தொடர்ந்து பாதிப்பை சந்தித்து வந்தனர்.இதுகுறித்து கடந்த ஏப்.,14 படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக கோயில் ராஜகோபுரம் முன்புறம் உள்ள வளாகப் பகுதிகளில் போலீசார் சுற்றிலும் நகரக்கூடிய தடுப்பு வேலிகளை வைத்துள்ளனர். வாகனங்கள் அப்படியே செல்வதற்கு தடை ஏற்படுத்தும் வகையில் பாதுகாப்பு கம்பிகளை கட்டியுள்ளனர்.இதனால் அப்பகுதியில் வாகனங்கள் பார்க்கிங் செய்ய வழி இல்லாததால் போக்குவரத்திற்கு எவ்வித இடையூறும் இன்றி விசாலமாக காணப்படுகிறது.கார்களில் வரக்கூடிய பக்தர்கள் கோயில் அருகே இறக்கிவிட்டு பார்க்கிங் செய்வதற்கு வசதியாக வராகி அம்மன் கோயில் அருகேயும், உத்தரகோசமங்கை மேற்கு மற்றும் தெற்கு ரத வீதியிலும் வாகனங்களை பார்க்கிங் செய்கின்றனர்.