உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கால்வாய் பாலம் தடுப்பு உடைப்பால் ஆபத்து

கால்வாய் பாலம் தடுப்பு உடைப்பால் ஆபத்து

பரமக்குடி: பரமக்குடி தேசிய நெடுஞ்சாலை உட்பட பல்வேறு ரோடுகளில் கால்வாய் பாலங்களின் தடுப்புகள் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் செல்கின்றனர். மதுரை-ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் பல்வேறு இடங்களில் கால்வாய் குறுக்கே செல்கிறது. இதேபோல் நயினார்கோவில், போகலுார், பரமக்குடி ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு செல்லும் மாநில நெடுஞ்சாலைகளிலும் கால்வாய் குறுக்கிடுகிறது. இதன்படி ஒவ்வொரு கால்வாய்கள் மீதும் பாலங்கள் அமைக்கப்பட்டு வாகன போக்குவரத்து உள்ளது. 30 அல்லது 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பாலங்களின் பக்கவாட்டுகளில் கம்பிகள் அமைத்து கான்கிரீட் தடுப்புகள் போடப்பட்டுள்ளது. இவற்றை தொடர்ந்து பராமரிக்காமல் விட்டுள்ளதால் சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து கம்பிகள் தெரிகின்றன. இதன்படி பரமக்குடி வேந்தோணி செல்லும் ரோடு, பரமக்குடி, ராமநாதபுரம் மற்றும் மதுரை செல்லும் பகுதி உட்பட எமனேஸ்வரம் என பல்வேறு கால்வாய் பாலங்கள் சேதமடைந்துஉள்ளன. இதனால் பாதசாரிகள் வாகனங்களுக்கு வழி விடும்போது தடுப்பு இன்றி தடுமாறும் நிலை ஏற்படுகிறது. மேலும் டூவீலர், ஆட்டோ ஆகிய சிறிய வாகனங்கள் கவிழும் நிலை உள்ளது. தற்போது கால்வாய்களில் நீர்வரத்து உள்ள நிலையில் பொதுமக்கள் மற்றும் வாகன பயணிகளின் பாதுகாப்பு கருதி அனைத்து பாலங்களின் தடுப்புகளையும் சீரமைக்க பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !