உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ரோட்டோர மரங்களில் ஆணி அடிப்பதால் பாதிக்கும் அபாயம்

ரோட்டோர மரங்களில் ஆணி அடிப்பதால் பாதிக்கும் அபாயம்

திருவாடானை : தனியார் நிறுவனங்கள் விளம்பர பதாகைகளுக்காக மரங்களில் ஆணி அடிப்பதால் விரைவில் பட்டுப்போகும் அபாயம் உள்ளது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர். வர்த்தக நிறுவனங்களை சேர்ந்த சிலர் தங்கள் நிறுவன போர்டுகளை ரோட்டோர மரங்களில் ஆணி அடித்து தொங்க விடுகின்றனர். விளம்பர போர்டுகளுக்காக ஆணி அடிப்பதால் மரங்களில் இருந்து நீர் கசிவு ஏற்பட்டு பொந்துகள் உருவாகி பட்டுப்போய் மரம் முறிந்து விழுகிறது. விளம்பர பதாகைகளுக்காக ஆணி அடிப்பதை பார்க்கும் போது வேதனையாக உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது:திருவாடானை தாலுகாவில் மதுரை- தொண்டி தேசிய நெடுஞ்சாலை, மங்களக்குடி- வட்டாணம் ரோடு, ஓரியூர்-எஸ்.பி.பட்டினம் ரோடு போன்ற பல்வேறு ஊர்களுக்கு செல்லும் ரோட்டோர பனை, வேப்ப மரம், புளியமரம் போன்ற பல மரங்களில் ஆணி அடிப்பதால் ஓட்டை ஏற்பட்டு அது பெரிதாகி பொந்து ஏற்படுகிறது. இதனால் மரம் வலுவிழந்து கிளைகள் முறிந்து விழுகிறது. மரம் அதன் முழுபலனையும் கொடுக்க முடியாமல் வளர்ச்சியின்றி முடங்கி விடுகிறது. இதனால் விரைவில் பட்டுபோய் பலத்த காற்றடித்தால் சாய்ந்து விடுகிறது. மழைக்காவும், சுற்றுச் சூழலை மேம்படுத்துவதற்காகவும், நிழலுக்காகவும் வீடுகள் தோறும் மரங்கள் வளர்க்க அரசு வலியுறுத்தி வருகிறது. அரசு விழாக்களில் முதல் கட்டமாக மரக்கன்றுகள் நடுதல் முக்கிய திட்டமாக உள்ளது. இந்த நோக்கத்தை அழிக்கும் விதமாக சிலர் செயல்படுகின்றனர். எனவே மரங்களில் ஆணி அடிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ