3 நாளாக உடலை வாங்காமல் மின்வாரிய அலுவலகத்தை கண்டித்து சாலை மறியல்
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் விவசாயி இறந்த நிலையில் 3-வது நாளாக உடலை வாங்காமல் மின்வாரியத்தின் அலட்சியப் போக்கை கண்டித்து மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். முதுகுளத்துார் அருகே கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் சித்திரைவேல் 50. மேலத்துாவல் பகுதியில் ஆட்டுக்கிடை அமைத்துள்ளார். கடந்த ஆக.,2ல் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் சித்திரைவேல் இறந்தார். அவரை காப்பாற்ற வந்த மகன் பிளஸ் 1 மாணவன் கிஷோர்குமார் காயமடைந்து ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து நிவாரணம் வழங்கவும், அரசு வேலை வழங்கவும், மின்வாரிய அதிகாரியை சஸ்பெண்ட் செய்யவும், பாதிக்கப்பட்ட மாணவனுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் வலியுறுத்தி தற்போது வரை 3-வது நாளாக உடலை வாங்க மறுத்துள்ளனர். இந்நிலையில் தமிழ்நாடு கால்நடை வளர்போர் பாதுகாப்பு சங்கம் நிறுவனர் சரவணன் தலைமையில் நிர்வாகிகள், கிராம மக்கள் சார்பில் மின்வாரிய அலுவலகத்தை கண்டித்து முதுகுளத்துார் பரமக்குடி ரோடு மின்வாரிய அலுவலகம் முன்பு 500க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் வாகனங்கள் சுற்றி செல்வதால் ஆற்றுப்பாலம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த ஆர்.டி.ஓ., சரவணபெருமாள், தாசில்தார் கோகுல்நாத், டி.எஸ்.பி., சண்முகம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.