ஓராண்டில் சேதமடைந்த ரோடு
முதுகுளத்துார்: முதுகுளத்துார் -ராமநாதபுரம் ரோடு காக்கூர் அருகே ஓராண்டிற்கு முன்பு ரோடு அகலப்படுத்தும் பணி முடிந்துள்ள நிலையில் தற்போது ஆங்காங்கே விரிசலடைந்து சேதமடைந்துள்ளது.முதுகுளத்துாரில் இருந்து காக்கூர் கருமல், தேரிருவேலி, உத்தரகோசமங்கை வழியாக ராமநாதபுரத்திற்கு தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. ரோடு குறுகலாக இருப்பதால் எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட்டு செல்ல முடியாமல் சிரமப்பட்டு வந்தனர். இதுகுறித்து பலமுறை தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.இதையடுத்து ஓராண்டுக்கு முன்பு முதுகுளத்துாரில் இருந்து காக்கூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோடு அகலப்படுத்தும் பணி முடிந்துள்ளது. காக்கூர் சோலையபுரம், அரசு கலைக் கல்லுாரி அருகே புதிதாக அமைக்கப்பட்ட ரோட்டின் ஓரத்தில் விரிசல் ஏற்பட்டு சேதமடைந்துள்ளது.வரும் நாட்களில் மேலும் மணல் அரிப்பு ஏற்பட்டு ரோடு முழுவதும் சேதமடையும். இதனால் அரசு நிதி வீணடிக்கப்பட்டுள்ளது. எனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.