விபத்தில் இறந்த ஆட்டோ டிரைவர் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் இழப்பீடு
ராமநாதபுரம்: விபத்தில் இறந்த ஆட்டோ டிரைவரின் குடும்பத்தினருக்கு இன்சூரன்ஸ் தொகை வழங்காமல் அலட்சியமாக செயல்பட்டதற்காக காப்பீடு நிறுவனம் ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என ராமநாதபுரம் நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தர விட்டது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மேலாய்க்குடி பகுதியை சேர்ந்தவர் லெட்சுமி 27. இவரது கணவர் ரஞ்சித்குமார் 2023 மார்ச் 21ல் பரமக்குடியில் இருந்து முதுகுளத்துாருக்கு ஆட்டோ சவாரி சென்றுள்ளார். அப்போது அரசு பஸ் மோதி உயிரிழந்தார். ரஞ்சித்குமார் ப்யூச்சர் ஜெனரல் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் விபத்து காப்பீடு பதிவு செய்துள்ளார். அதனை வழங்கக் கோரி மனைவி லெட்சுமி விண்ணப்பித்துள்ளார். முறையான ஆவணங்கள் வழங்காததை காரணம் காட்டி இன்சூரன்ஸ் நிறுவனம் அவரது விண்ணப்பத்தை நிராகரித்துள்ளது. இந்நிலையில் ராமநாதபுரம் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் காப்பீடு தொகை பெற்றுத்தர வலியுறுத்தி மனு தாக்கல் செய்தார். இதனை ஆணையத் தலைவர் பாலசுப்பிரமணியம், உறுப்பினர் குட்வின் சாலமோன் ராஜ் விசாரித்தனர். ரஞ்சித்குமார் உயிரிழந்தது குறித்து இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு விண்ணப்பித்து 8 மாதங்கள் கழித்து பதில் அனுப்பி அலட்சியமாக செயல்பட்டுள்ளனர். அதனால் உரிய பாலிசி தொகை ரூ.15 லட்சத்தை இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்க வேண்டும். இதில் ரூ.10 லட்சத்தை ரஞ்சித்குமார் மனைவி லெட்சுமிக்கும், ரூ.5 லட்சத்தை அவரது 5 வயது மகள் பெயரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும். மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக ரூ.1 லட்சம் இழப்பீடு, வழக்கு செலவுக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர். அதே போல் பரமக்குடி கனிநகர் பகுதியை சேர்ந்த பானுமூர்த்தி 2022ல் மூட்டுமாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளார். அவருக்கு பாதி காப்பீடு தொகை மட்டும் வழங்கப்பட்டதாக மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நுகர்வோர் குறைதீர் ஆணையம் அறுவை சிகிச்சைக்கான முழுத்தொகை வழங்குமாறும், ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்குமாறும் உத்தரவிட்டது.