அகர்பத்தி தயாரிக்க இயந்திரம் என ரூ.5 லட்சம் மோசடி பணம் மீட்டு ஒப்படைப்பு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே அகர்பத்தி தயாரிக்க இயந்திரம் தருவதாக கூறி ரூ. 5 லட்சம் மோசடி செய்தவரிடம் இருந்து பணத்தை போலீசார் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர்.ராமநாதபுரம் அருகே உச்சிப்புளி சேர்ந்த வேணுபாரதி 30. இவர் யுடியூப்பில் வீட்டில் இருந்தபடியே அகர்பத்தி தயாரித்து பணம் சம்பாதிக்கலாம் என விளம்பரத்தை பார்த்துள்ளார். இதனை பார்த்ததும் அதில் உள்ள அலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு அகர்பத்தி இயந்திரத்திற்காக ரூ. 5 லட்சம் செலுத்தியுள்ளார். இதற்குப் பின் அந்த அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ள முடியவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வேணுபாரதி ஆன்லைன் மூலம் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.இதனையடுத்து எஸ்.பி., சந்தீஷ் உத்தரவின்படி சைபர் கிரைம் போலீசார் சம்பந்தப்பட்ட அலைபேசி எண் உரியவருடைய வங்கி கணக்கினை கண்டறிந்து ஒரு மாதத்திற்குள் ரூ. 5 லட்சத்தை மீட்டு வேணுபாரதியின் வங்கி கணக்கில் வரவு வைத்தனர். இதற்கான வங்கி ரசீது நகலை எஸ்.பி., சந்தீஷ், வேணுபாரதியிடம் வழங்கினார்.