தொண்டியில் வைகாசி விசாக விழாவில் பாய்மர படகு போட்டி
தொண்டி: ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் மகாசக்திபுரத்தில் கடல் சூழ்ந்த மாரியம்மன் கோயில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு பாய்மரபடகு போட்டி நடந்தது.தொண்டி மகாசக்திபுரத்தில் கடல் சூழ்ந்த மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு பாய்மர படகு போட்டி நடந்தது.இந்த போட்டியில் 25 படகுகள் பங்கேற்றன. படகு ஒன்றுக்கு 6 பேர் வீதம் செல்ல அனுமதிக்கப்பட்டது. 5 நாட்டிக்கல் மைல் தொலைவு எல்லை நிர்ணயிக்கப்பட்டிருந்தது.வாணவெடி சத்தத்துடன் போட்டி துவங்கியது. காற்றின் வேகத்திற்கு தகுந்தவாறு படகுகளை வீரர்கள் செலுத்தினர். போட்டியை காண ஏராளமானவர்கள் வெளியூர்களில் இருந்து வந்திருந்தனர். முதலாவதாக பாசிபட்டினம் ரியாபுகாரி, இரண்டாவதாக தொண்டி புதுக்குடியை சேர்ந்த களஞ்சியம், மூன்றாவதாக அதே பகுதியை சேர்ந்த கவியரசன் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு விழா குழுவினர் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.