வைகை ஆற்றில் தொடரும் மணல் கொள்ளை.. அதிகாரிகள் அலட்சியம்: தடுத்து, நாணல், கருவேல மரங்களை அகற்றுங்க..
பரமக்குடி: பரமக்குடி அருகே வைகை ஆற்றில் தொடர் மணல் கொள்ளை நடக்கும் சூழலில், அதிகாரிகள் கண்டும் காணாதது போல உள்ளனர். கனிம வளத்தை பாதுகாக்கவும், அதிகளவில் வளர்ந்துள்ள நாணல், கருவேல மரங்களை அகற்றிடவும், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர். ஆற்றங்கரை நாகரிகத்தை மையமாக வைத்து ஒவ்வொரு நகர், கிராமம் கட்டமைக்கப்பட்டது. இதன்படி தேனி வருஷ நாட்டில் உற்பத்தியாகும் வைகை, கடலில் நேரடியாக கலக்காமல் ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரிய கண்மாயில் நிறைவடைகிறது. விவசாயம், குடிநீர் மற்றும் நெசவு என சாயத் தொழிலுக்கு உகந்ததாக வைகை ஆறு இருந்ததால் பலரும் குடியேறினர். இன்று கழிவுநீர் கலப்பு ஒருபுறம் இருக்கும் சூழலில், இருக்கும் மணலையும் பாதுகாக்க வழி இன்றி உள்ளது. தொடர்ந்து தடுப்பணை கட்டுமானம், பாலங்கள் கட்டுதல் என ஆறு ஆங்காங்கே சுருங்கி வருகிறது. இந்த சூழலில் நாணல், கருவேல மரங்கள் என வளர்ந்து மணல் கொள்ளைக்கு அச்சாரமாக உள்ளது. மேலும் கடந்த காலங்களில் அரசு அமைத்த மணல் குவாரிகளால் பல பகுதிகள் கட்டாந்தரையாகிவிட்டது. இருக்கும் மணல் உள்ளிட்ட கனிம வளத்தை பாதுகாக்க தவறும் சூழலில் நீர் ஆதாரம் மிகப்பெரிய கேள்விக்குறியாக அமையும். ஆகவே ஒரு சிலரின் சுய லாபத்திற்காக மணல் அள்ளப்படுவதை தடுத்து, ஆற்றை பாதுகாக்க வேண்டும். மணல் கொள்ளையை தடுக்க வேண்டும். இதுகுறித்து பரமக்குடி ஆர்.டி.ஓ., சரவண பெருமாள் கூறுகையில், வைகை ஆற்றில் மணல் கொள்ளை தொடர்பாக ஆர்.ஐ., மற்றும் தாசில்தார் உள்ளிட்ட வருவாய் அதிகாரிகள் ரோந்து சென்று நடவடிக்கை எடுத்து வருகின்றனர், என்றார்.