ராமேஸ்வரத்தில் வாகன நெரிசல் பீதியடையும் பள்ளி மாணவிகள்
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் வாகன நெரிசலால் பள்ளிக்கு செல்லும் மாணவிகள் சாலையை அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலுக்கு சொந்தமான பர்வதவர்த்தினி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1100 மாணவிகள் படிக்கின்றனர். இப்பள்ளி தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ளதால் இச்சாலையில் தினமும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள், ஆட்டோக்கள், சரக்கு லாரிகள், அரசு பஸ்கள் வந்து செல்கின்றன. இதனால் இச்சாலை வாகன நெரிசலுடன் பரபரப்பாக இருப்பதால் பள்ளிக்கு மாணவிகள் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். இதனை தவிர்க்க சில மாதங்களாக இங்கு போலீசாரை நியமித்து வாகன நெரிசலை ஒழுங்குப்படுத்தி மாணவிகள் அச்சமின்றி பள்ளிக்கு செல்ல வைத்தனர்.ஆனால் கடந்த சில நாட்களாக போலீசார் இல்லாததால் மீண்டும் பள்ளி முன்பு வாகன நெரிசலில் மாணவிகள் தவிக்கின்றனர். இதனால் எதிர்காலத்தில் மாணவிகளுக்கு விபரீதம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இங்கு போலீசாரை நியமித்து வாகன நெரிசலை ஒழுங்குபடுத்த எஸ்.பி., சந்தீஷ் உத்தரவிட வேண்டும்.